வயநாட்டில் தொடரும் மீட்பு பணி: மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை

வயநாடு நிலச்சரிவு, கேரளாவின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Update: 2024-08-13 03:09 GMT

கோப்புப்படம்

வயநாடு,

வயநாட்டில் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகள் புதையுண்டதோடு, பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவு, கேரளாவின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. சாலியாற்றின் இரு கரைகளிலும் இருந்து உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. அடையாளம் தெரியாத உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு பின்னர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. மேலும் 130-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதையடுத்து அவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று 15-வது நாளாக மீட்பு பணி நடைபெறுகிறது. சாலியாற்றின் அருகே உள்ள சூச்சிப்பாறை, காந்தன்பாறை, போத்துகல் உள்பட 5 பகுதிகளில் உடல்கள் உள்ளதா? என தேடுதல் பணி நேற்று நடந்தது. குறிப்பாக முண்டேரி பண்ணை முதல் பரப்பன்பாறை வரை உள்ள சாலியாற்றில் 5 கி.மீ. தூரம் என தேடும் பணி நடந்தது. நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேசிய பேரிடர் மீட்பு படை, போலீசார், தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர், தன்னார்வலர்கள் அடங்கிய 190 பேர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கெட்டுப்பாறை மற்றும் இருட்டுக்குத்தியில் இருந்து தலா ஒரு உடல் என 2 உடல்கள் நேற்று கண்டறியப்பட்டது. பின்னர் அவை மீட்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்காக கல்பெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சி அருகில் மனித மண்டை ஓடு மற்றும் உடல் பாகம் மீட்கப்பட்டது. அவை நிலம்பூர் வழியாக கல்பெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மோசமான வானிலை காரணமாக சாலியாற்றில் தேடுதல் பணி கடினமாக உள்ளது என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலியாற்றில் இருந்து இதுவரை 245 உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்