தற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயமான வாலிபர் பல்லாரியில் மீட்பு
பெண் சப்-இன்ஸ்பெக்டர் தொல்லை கொடுப்பதாக கூறி தற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயமான வாலிபர் பல்லாரியில் மீட்கப்பட்டார்.;
ராய்ச்சூர்:
ராய்ச்சூர் மாவட்டம் சிரிவாரா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கீதாஞ்சலி ஷிண்டே. இவர் அந்த பகுதியை சேர்ந்த தயன்னா(வயது 28) என்ற வாலிபருக்கு விசாரணை தொடர்பாக அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இதற்கிடையே தயன்னா, கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து மாயமானார். அதில் பெண் சப்-இன்ஸ்பெக்டர், தன் மீதுள்ள பழைய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து தொல்லை கொடுத்தார்.
அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறி இருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிரிவாரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பல்லாரியில் தயன்னாவை போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது உயர் அதிகாரியிடம் புகார் அளிப்பதற்காக அங்கு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.