குடியரசு தினம் எதிரொலி; இந்தோ-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் கடல், தரை மார்க்க தீவிர ரோந்து பணி
குடியரசு தினம் எதிரொலியாக, தேச விரோத சக்திகளின் சதி செயலை முறியடிக்க இந்தோ-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஒரு வாரகால ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.;
புதுடெல்லி,
நாட்டில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக, ராணுவ வீரர்கள் சீருடை அணிந்து கடந்த சில நாட்களாக பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். வடஇந்தியாவில் பனியால் கடும் குளிரான சூழல் காணப்பட்ட போதிலும், தொடர்ந்து வீரர்கள் தீவிர கண்காணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு 7 நாட்கள் எல்லை பாதுகாப்பு பணியில் அதிக எச்சரிக்கையுடன் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்காக ஜனவரி 21-ந்தேதி முதல் ஜனவரி 28-ந்தேதி வரை இந்தோ-பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் ஆபரேசன் அலெர்ட் என்ற பெயரிலான பாதுபாப்பு ரோந்து பணியானது மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, குஜராத்தின் கட்ச் பகுதியில் சர் கிரீக் முதல் ரான் பகுதி வரையிலும், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்திலும் இந்த பணியானது நடைபெறும். தேச விரோத சக்திகளின் சதி செயலை முறியடிப்பதற்காக இந்த பாதுகாப்பு மற்றும் ரோந்து பயிற்சி நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று நாட்டின் எல்லையையொட்டிய, கடல் பகுதியில் ரோந்து படகுகளில் வீரர்கள் சுற்றி வந்து, அதன் வழியே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.