சிறுத்தைகளை விடும் நிகழ்ச்சி: பிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டப்பட்டதா? -மத்தியபிரதேச வனத்துறை விளக்கம்

சிறுத்தைகளை விடும் நிகழ்ச்சிக்காக வந்த பிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டப்பட்டதா என்பது குறித்து மத்தியபிரதேச வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.;

Update: 2022-09-23 20:12 GMT

Image Courtesy: PTI

போபால்,

பிரதமர் மோடி பிறந்தநாள் கடந்த 17-ந்தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டிருந்தன. அந்த சிறுத்தைகளை மத்தியபிரதேச மாநிலம் குணோவில் உள்ள தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி திறந்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மற்றும் 300 முக்கிய பிரமுகர்கள் வருகைக்காக அங்கிருந்த சுமார் 300 மரங்கள் வெட்டப்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

பொய் செய்தி

வன உயிரியல் பூங்காவில் ஒரு விருந்தினர் இல்லம் மட்டுமே இருப்பதால், முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு கூடாரம் அமைப்பதற்காகவும், பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான தளம் அமைப்பதற்காகவும் இந்த மரங்கள் வெட்டப்பட்டதாக அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், இத்தகவலை மத்தியபிரதேச வனத்துறை நேற்று மறுத்தது. வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஹெலிகாப்டர் தளம் அமைக்க ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை. மரங்களே இல்லாத பகுதிதான் அதற்கு தேர்வு செய்யப்பட்டது. எனவே, மரம் வெட்டப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது.

300 முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கவில்லை. அவர்களுக்காக கூடாரமும் அமைக்கவில்லை. சசைபுரா சொகுசு விடுதியில்தான் கூடாரம் அமைக்கப்பட்டது. அங்குதான் முக்கிய பிரமுகர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

எனவே, வன உயிரியல் பூங்காவில் கூடாரம் அமைத்ததாக கூறுவதும் அடிப்படை ஆதாரமற்றது. இவ்வாறு அவர் கூறினார். மேலும், மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையமும் இச்செய்தியை மறுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்