'காஷ்மீர் வரை செல்வதை யாரும் தடுக்க முடியாது' - ராகுல்காந்தி ஆவேசம்
காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை மத்தியபிரதேசத்துக்குள் நுழைந்தது. காஷ்மீர் வரை செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று ராகுல்காந்தி கூறினார்.;
போபால்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை பாதயாத்திரை நடக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக மராட்டிய மாநிலத்தை அடைந்தது. நேற்று காலை, மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.
காங்கிரஸ் தொண்டர்கள் மூவர்ண கொடியை ஏந்தியபடி நடந்து சென்றனர். அவர்கள் இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்குள் நுழைந்தனர்.
நாட்டுப்புற கலைஞர்கள்
அதற்கு அடையாளமாக, மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், மூவர்ண கொடியை மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்திடம் ஒப்படைத்தார்.
அங்கு ராகுல்காந்திக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாழைமரங்களால் கிராமம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நாட்டுப்புற கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் சுரேஷ் பச்சோரி, அருண் யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
தடுக்க முடியாது
பின்னர், அங்கு கூடியிருந்தவர்கள் இடையே ராகுல்காந்தி பேசினார். அவர் பேசியதாவது:-
கன்னியாகுமரியில் நாம் பாதயாத்திரையை தொடங்கியபோது, இவ்வளவு தூரம் நடக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால், மூவர்ண கொடி ஏந்தி மத்தியபிரதேசத்துக்கு வந்து விட்டோம். ஸ்ரீநகர் வரை சென்று மூவர்ண கொடி ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.
பா.ஜனதா முதலில் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரிடையே அச்சத்தை விதைத்தது. அதன்பிறகு அதை வன்முறையாக மாற்றி விட்டது. அவர்கள் பரப்பிய வெறுப்பு, வன்முறை, அச்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்த பாதயாத்திரை நடக்கிறது என்று அவர் பேசினார்.
கல்வி தனியார்மயம்
தனது பேச்சுக்கு இடையே, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ஒரு 5 வயது சிறுவனை ராகுல்காந்தி மேடைக்கு அழைத்தார். அவனிடம் உனது லட்சியம் என்ன? என்று கேட்டார். அவன், டாக்டர் ஆக விரும்புவதாக கூறினான்.
அதைத்தொடர்ந்து ராகுல்காந்தி பேசியதாவது:-
தற்போதைய இந்தியாவில் இச்சிறுவனின் கனவு நிறைவேறுவது கடினம். ஏனென்றால், தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கு இவனது பெற்றோர் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கும். கட்டணம் செலுத்த முடியாமல், இவன் தொழிலாளியாகத்தான் வேலை செய்ய வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு கல்வி தனியார்மயமாவது அதிகரித்து வருகிறது.
தொழில் அதிபர்கள் கையில் ரெயில்வே
தொழிற்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவை மூன்று, நான்கு தொழில் அதிபர்கள் கையில் இருக்கின்றன. ரெயில்வே கூட அவர்களின் கைக்கு செல்ல போகிறது. இத்தகைய இந்தியாவை நாங்கள் விரும்பவில்லை. பெட்ரோல், டீசல் வாங்க சாமானியன் பாக்கெட்டில் இருந்து செல்லும் பணம், அந்த தொழில் அதிபர்களின் பாக்கெட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது என்று அவர் பேசினார்.
மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது. அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்கள்.
இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் நடக்கும் பாதயாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் கலந்து கொள்வார் என்று கமல்நாத் ஏற்கனவே அறிவித்துள்ளார்.