மருத்துவ சேவைகள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர்கள் நீக்கம் - மேற்கு வங்காள அரசு உத்தரவு

மருத்துவ சேவைகள் இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோரை நீக்கி மேற்கு வங்காள அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-09-17 12:29 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.

தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது. அதோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கடந்த செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பயிற்சி டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இருப்பினும், இரண்டு முறை பேச்சுவார்த்தை ரத்தானது. இந்நிலையில், 30 பேர் அடங்கிய மருத்துவர் குழுவினர் நேற்று மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக மேற்கு வங்காள மாநில மருத்துவ சேவைகள் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் மாநில சுகாதாரத்துறையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், மருத்துவ சேவைகள் இயக்குநர் டெபாசிஷ் ஹல்தர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் கஸ்தவ் நாயக் ஆகியோரை நீக்கி மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ சேவைகளுக்கான புதிய பொறுப்பு இயக்குநராக ஸ்வபன் சோரனும், மருத்துவக் கல்வி சிறப்புப் பணிக்கான அதிகாரியாக சுபர்ணா தத்தாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம், கஸ்தவ் நாயக், மருத்துவம் மற்றும் குடும்ப நலக் கழகத்தின் இயக்குநராகவும், டெபாசிஷ் ஹல்தர், மாநில சுகாதாரத்துறை தலைமையகமான ஸ்வஸ்தியா பவனில் பொது சுகாதார சிறப்புப் பணிக்கான அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்