பெங்களூருவில் 2,052 கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்- கர்நாடக ஐகோர்ட்டில் மாநகராட்சி அறிக்கை தாக்கல்
பெங்களூருவில் 2,052 கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு இருப்பதாக கர்நாடக ஐகோர்ட்டில் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.;
பெங்களூரு: பெங்களூருவில் 2,052 கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு இருப்பதாக கர்நாடக ஐகோர்ட்டில் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆக்கிரமிப்புகள்
கர்நாடக ஐகோர்ட்டில் 'சிட்டிசன்ஸ் ஆக்ஷன் குரூப்' ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், பெங்களூருவில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) அலோக் அராதே தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெங்களூரு மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், மழைநீர் கால்வாய்களில் 2 ஆயிரத்து 666 கட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது.
கோர்ட்டுகளில் வழக்கு
அதில் "இதுவரை 2 ஆயிரத்து 52 கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்ட்டு இருக்கிறது. இன்னும் 614 கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும். அவற்றல் 110 கட்டிடங்கள் தொடர்பாக கோர்ட்டுகளில் வழக்கு நடக்கிறது. அதுபோக 504 கட்டிடங்கள் அகற்றப்படும். பேகூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளில் 50 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது நீதிபதிகள், பேகூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்த அறிக்கையை நாளை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.