ஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை - ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்

இதுவரை 285 பேருக்கு ரூ.3.22 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-06-05 00:26 GMT

புவனேஸ்வர்,

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான ரெயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரெயில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 139 என்ற உதவி எண்ணில் ரெயில்வே மூத்த அதிகாரிகள் 24 மணி நேரமும் பதிலளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி எண் மூலம் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சரியான தகவல்களை அளிக்க உதவும் என கூறப்பட்டுள்ளது. இந்த சேவை தடையின்றி தொடரும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்த உதவித்தொகையை உடனடியாக வழங்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரெயில் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கும், பலத்த காயமடைந்த 50 பேருக்கும், லேசான காயமடைந்த 224 பேருக்கும் என மொத்தமாக 285 பேருக்கு ரூ.3.22 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் காரக்பூர், சோரோ, பாலசோர், கண்டாபாரா, பத்ரக், கட்டாக் மற்றும் புவனேஸ்வர் ஆகிய 7 இடங்களில் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்