பத்ரா அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

சிவமொக்காவில் விவசாய பாசனத்திற்காக பத்ரா அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-08-10 18:45 GMT

சிவமொக்கா:-

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் அப்போது போதிய மழை பெய்யவில்லை. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதையடுத்து ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. குறிப்பாக மலைநாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிய தொடங்கின. ஆனால் சில மாவட்டங்களில் சராசரியான அளவே மழை பெய்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக சிவமொக்கா மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பத்ரா அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அதன்படி பத்ரா அணையின் மொத்த கொள்ளளவு 186 அடி உள்ளது. இதில் தற்போது 166 அடி மட்டுமே தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த அணையில் 72 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீரை சேமித்து வைக்க முடியும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் அணையில் 49 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது.

தண்ணீர் திறப்பு

இந்தநிலையில் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி கோரிக்கை வைத்து வந்தனர். அதை ஏற்ற நீர்பாசனத்துறை அதிகாரிகள் 100 நாட்கள் விவசாய சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்தனர். அதாவது கடந்த 10-ந் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் இறுதி வரை 100 நாட்கள் தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்காக அணையின் இடது மதகு வழியாக வினாடிக்கு 308 கன அடியும், வலது மதகு வழியாக வினாடிக்கு 2,650 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. அதாவது அணையில் இருந்து இரு மதகு வழியாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்