கிருஷ்ணா 3-வது கட்ட மேலணை திட்டம்: நீரில் மூழ்கும் 20 கிராம மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் - மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி
கிருஷ்ணா 3-வது கட்ட மேலணை திட்டத்தால் நீரில் மூழ்கும் 20 கிராம மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மக்களுக்கு மறுவாழ்வு
கிருஷ்ணா 3-வது கட்ட மேலணை திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்ட பணிகளுக்கு வருகிற டிசம்பர் மாதத்திற்குள் ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். அந்த திட்டத்திற்கு தேவையான 11 ஆயிரம் ஏக்கா் நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக முடிக்கப்படும்.
ஆலமட்டி அணையில் 524.256 மீட்டர் உயரம் வரை நீரை தேக்கி வைக்க 76 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 37 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்படும். நீர்மட்டத்தை உயர்த்துவதால் அதனை ஒட்டியுள்ள 20 கிராமங்கள் நீரில் மூழ்கும். அந்த கிராமங்களில் உள்ள 3,700 கட்டிடங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
மின்சாரம்-குடிநீர்
அந்த 20 கிராம மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்படும். இதற்காக தனியாக ஒரு மையத்தை தொடங்கவும் முடிவு செய்துள்ளோம். அந்த 20 கிராம மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்க 6 ஆயிரத்து 437 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதில் 3 ஆயிரத்து 278 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கிராமங்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.