அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: கர்நாடகத்தில் 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் கர்நாடகத்தில் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.;
பெங்களூரு: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் கர்நாடகத்தில் 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
'ரெட் அலர்ட்'
கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை இல்லை. இதனால் மக்கள் சற்று நிம்மதியாக இருந்தனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும் உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா, தாவணகெரே, சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய 6 மாவட்டங்களுக்கு 4 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 6 மாவட்ட மக்கள் கவனமுடன் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் கேட்டு கொண்டு உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழைக்கு பல லட்சம் ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. தாவணகெரேயில் பெய்த கனமழைக்கு 197 வீடுகள் சேதம் அடைந்து உள்ளது. 167 வீடுகளை தண்ணீரில் சூழ்ந்து உள்ளது.
மைசூருவில் 321.9 மில்லி மீட்டர்
கதக் அருகே பென்னேஹல்லா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வேலைக்காக சென்ற 4 தொழிலாளர்கள் நடு ஆற்றில் சிக்கி கொண்டனர். இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் நேற்று காலை 4 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர். சிக்பள்ளாப்பூர் கொட்டி தீர்த்த கனமழைக்கு 125 ஏக்கர் திராட்சை தோட்டங்கள் சேதம் அடைந்து உள்ளது.
விஜயநகர் மாவட்டம் நவலி கிராமத்தில் துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் கதக்கில் 220 மில்லி மீட்டர், கொப்பலில் 172 மில்லி மீட்டர், மைசூருவில் 321.9 மில்லி மீட்டர், கோலாரில் 236.6 மில்லி மீட்டர், மண்டியாவில் 157.7 மில்லி மீட்டர், சிக்கமளூருவில் 125 மில்லி மீட்டர், ராய்ச்சூரில் 72.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.