துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு பார்சல் மூலம் கடத்திய ரூ.12½ லட்சம் தங்கம் மீட்பு

துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு பார்சல் மூலம் கடத்திய ரூ.12½ லட்சம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-10-16 18:45 GMT

பெங்களூரு: துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு பார்சல் மூலம் கடத்திய ரூ.12½ லட்சம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பார்சல்களில் தங்கம்

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வந்த விமானங்களில் பயணிகளிடமும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்த பயணிகளிடம் இருந்தும் தங்கம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் 2 பார்சல்கள் வந்திருந்தது. அந்த பார்சல்கள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பார்சல்களை பிரித்து பார்த்த போது, அதற்குள் சிறுவர்களுக்கான ஆடைகள் இருந்தது. மேலும் அவற்றுக்குள் தங்கம் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.

ரூ.12½ லட்சம் மதிப்பு

அதாவது 2 பார்சல்களிலும் ஆடைகளுக்குள் மறைத்து வைத்து 244 கிராம் தங்கத்தை மர்மநபர்கள் கடத்தி இருந்தார்கள். அவற்றின் மதிப்பு ரூ.12½ லட்சம் ஆகும். அந்த தங்கத்தை போலீசார் மீட்டனர். துபாயில் இருந்து சிறுவர்களுக்கான ஆடைகளில் வைத்து மர்மநபர்கள், பெங்களூருவுக்கு தங்கத்தை கடத்தியது தெரியவந்துள்ளது.

அந்த பார்சல்களில் இருந்த முகவரி மூலமாக மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கம் கடத்திய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்