நீட் குறித்து விவாதிக்க தயார்; ஆனால் விவாதம் ஒழுக்கமாக நடைபெற வேண்டும் - மத்திய கல்வி மந்திரி
நீட் தேர்வு குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்திற்கு முன்பாக நீட் முறைகேடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்ததால் மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் 12 மணிக்கு மக்களவை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவையை வரும் 1-ந்தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றும், ஆனால் விவாதம் ஒழுக்கமாக நடைபெற வேண்டும் என்றும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்து விதமான விவாதங்களுக்கும் அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் விவாதங்கள் விதிமுறைகளை பின்பற்றி, ஒழுக்கமான முறையில் நடைபெற வேண்டும். ஜனாதிபதி நேற்று தனது உரையில் தேர்வு தொடர்பாக பேசியிருந்தார். இதன் மூலம் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்பதை காட்டுகிறது" என்று தெரிவித்தார்.