சிறுபான்மையின மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவி தொகை

கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-07 20:31 GMT

பெங்களூரு:-

கர்நாடக பட்ஜெட்டில் முதல்-மந்திரி சித்தராமையா சிறுபான்மையின மாணவர்களின் கல்விக்காக அறிவித்துள்ள திட்டங்கள் வருமாறு:-

கல்வி உதவித் தொகை

கர்நாடகத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகளின் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதை மாநில அரசு நிறுத்தி இருந்தது. சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதற்காக ரூ.60 கோடி ஒதுக்கப்படுகிறது.

மாநிலத்தில் 62 மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளிகள் உள்ளன. அந்த 62 பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் 13 ஆயிரம் மாணவர்கள் பயன் அடைவார்கள். இதற்காக ரூ.30 கோடி ஒதுக்கப்படுகிறது. மாநிலத்தில் புதிதாக 10 மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளிகள் தொடங்கப்படும்.

10 புதிய உண்டு உறைவிட பள்ளிகள்

200 மதரசா பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 23 பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தில் உள்ள மதரசா பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அறிவு திட்டத்தின் கீழ் சிறுபான்மையின மாணவர்கள் என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட 28 ெதாழில் படிப்புகளை படிக்க 2 சதவீத வட்டியில் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும். இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கப்படுகிறது.

மொரார்ஜி தேசாய் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கன்னடம் மற்றும் ஆங்கில மொழியை கற்றுக் கொடுக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. சிறுபான்மையின மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சி அளிக்க ரூ.4 கோடி ஒதுக்கப்படுகிறது. ராமநகர், பெலகாவி, தாவணகெரே, கலபுரகி, தட்சிண கன்னடா மாவட்டங்களில் உள்ள சிறுபான்மையின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ரூ.360 கோடி ஒதுக்கீடு

சிறுபான்மையின மாணவர்கள் ஐ.ஏ.எஸ் மற்றும் கே.ஏ.எஸ். தேர்வுகளுக்கு படிக்க 10 மாதங்கள் பெங்களூரு ஹஜ்பவனில் தங்கி இருந்து பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். வேலை வாய்ப்பில்லாத 10 ஆயிரம் சிறுபான்மையின இளைஞர்கள் சுய தொழில் தொடங்க வங்கியில் கடன் வாங்கினால், அதில், 20 சதவீதம் அரசு மானியமாக வழங்கும்.

'சுவாவாலம்பி சாரதி' திட்டம் தொடங்கப்பட்டு வேலையில்லாத சிறுபான்மையின இளைஞர்கள் நான்கு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியத்தில் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படும். முதல்-மந்திரி சிறப்பு வளர்ச்சி திட்டம் மற்றும் சிறுபான்மையினர் காலனி வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.360 கோடி ஒதுக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்