நீர்ப்பாசன துறையில் ஒரேநாளில் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மறு டெண்டர்:

நீர்ப்பாசன துறையில் ஒரேநாளில் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மறு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பா.ஜனதாவுக்கு எதிராக நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அக்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.

Update: 2023-02-15 16:51 GMT

பெங்களூரு:-

விரைவில் தேர்தல் தேதி

கா்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் பெங்களூருவில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதனால் பா.ஜனதா, அரசு கஜானாவை இஷ்டம் போல் கொள்ளையடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தேர்தலை சந்திக்க பணம் சோ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக நீர்ப்பாசன கழகம், விஸ்வேசுவரய்யா நீர்ப்பாசன கழகம் உள்ளிட்டவற்றில் அவசரகதியில் கூட்டத்தை கூட்டி பாசன திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீதி விசாரணை ஆணையம்

இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. திட்ட நிதி ஒதுக்கீட்டையும் 3 மடங்கு வரை அதிகரித்து கொண்டுள்ளனர். இது 40 சதவீத கமிஷன் விவகாரத்தின் ஒரு பாகம். மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமை ஆகும். கமிஷன் அதிகமாக கொடுக்கிறவர்களுக்கு திட்ட பணிகளை ஒதுக்குகிறார்கள். பெங்களூரு மாநகராட்சி, கிராம வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ரூ.20 ஆயிரம் கோடி பில் பாக்கி உள்ளது. இதில் 10 சதவீத கமிஷன் கொடுக்கிறவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.

இது முதல்-மந்திரியின் அலுவலகத்தில் இருந்தே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை தடுக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து சட்டசபையில் பிரச்சினை கிளப்புவோம். இந்த விவகாரத்தை நாங்கள் விட மாட்டோம். இதை இறுதி வரை நாங்கள் கொண்டு செல்வோம். கோர்ட்டில் தவறு செய்தவர்கள் மீது வழக்கு தொடுப்போம். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் பா.ஜனதா அரசின் ஊழல்கள் குறித்து நீதி விசாரணை ஆணையத்தை அமைப்போம்.

மறு டெண்டர்

இவர்களின் ஊழல்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வருவோம். நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கூளிஹட்டி சேகர் எம்.எல்.ஏ. கடிதம் எழுதி, விதிமுறைகளை திருத்தி நீர்ப்பாசன கழகங்களில் ஒரே நாளில் ரூ.18 ஆயிரம் கோடி டெண்டரை ரத்து செய்துவிட்டு மறு டெண்டர் விட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்யுமாறும் கோரியுள்ளார். இதே போல் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கூறியுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். கூளிஹட்டி சேகரின் கடிதம் ஆதாரம் இல்லையா?. இத்தகைய மோசமான ஊழல் அரசை நாங்கள் பார்த்தது இல்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அலுவலகத்தில் இருந்து தான் ஊழல்கள் தொடங்குகின்றன.

சாலை பள்ளங்கள்

வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட இந்த அரசு ரூ.7 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. இதில் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கடந்த 6 மாதங்களில் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்வோம். அனைத்து டெண்டர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்