உரிமம் இன்றி இயக்கப்படும் பைக் டாக்சி சேவையை நிறுத்த ஐகோர்ட்டு உத்தரவு
உரிமம் இன்றி இயக்கப்படும் பைக் டாக்சியை சேவையை தற்காலிகமாக நிறுத்த மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்துக்கு உரிமம் வழங்க முடியாது என கடந்த மாதம் மாநில அரசு கூறியது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் தொடர்ந்த மனு மீதான விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. மனு மீதான விசாரணை நீதிபதிகள் கவுதம் பட்டேல், எஸ்.ஜி. திகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பிரேந்திர சரப் உரிமம் இல்லாமல் இயங்கும் பைக் டாக்சி சேவையை நிறுத்திய பிறகு தான் மனு மீதான விசாரணை தொடர வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் உரிமம் இன்றி பைக் டாக்சியை இயக்க ரேபிடோ நிறுவனத்துக்கு தற்காலிக தடை விதித்தனர். தடையை மீறி பைக் டாக்சிகளை இயக்கினால் நிரந்தரமாக உரிமம் வழங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து பைக் டாக்சி நிறுவனமும் வருகிற 20-ந் தேதி வரை சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உறுதி அளித்தது. மனு மீதான விசாரணை 20-ந் தேதி நடைபெற உள்ளது.