2-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தனியார் பள்ளி முதல்வர் 'போக்சோ'வில் கைது

பெங்களூருவில் 2-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனியார் பள்ளி முதல்வர் ‘போக்சோ’வில் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2023-08-05 00:15 IST

பெங்களூரு:

பெங்களூருவில் 2-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனியார் பள்ளி முதல்வர் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி பலாத்காரம்

பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குன்சூரு பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் முதல்வராக இருப்பவர் லியாபர்ட் புஷ்பராஜ். அந்த பள்ளியில் சிறுமி ஒருவள் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் அந்த மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்தாள். அப்போது முதல்வர் புஷ்பராஜ், அந்த சிறுமியை பள்ளியையொட்டி இருக்கும் அறைக்கு தனியாக அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர் அந்த அறையில் வைத்து சிறுமியை பள்ளி முதல்வர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு, சிறுமிக்கு கேக் கொடுத்து, அதனை சாப்பிட வைத்து அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. பள்ளி முடிந்து மதியம் 3.30 மணியளவில் சிறுமி வீட்டுக்கு திரும்பி உள்ளாள். அப்போது தனக்கு வயிறு வலிப்பதாக தாயிடம் சிறுமி கூறியுள்ளாள். உடனே சிறுமியை குளிப்பாட்டுவதற்காக அழைத்து சென்றபோது, ரத்த கறை இருப்பதை தாய் கண்டுபிடித்துள்ளார்.

பள்ளி முதல்வர் கைது

இதுபற்றி சிறுமியிடம் தாய் கேட்டபோது தான் பள்ளி முதல்வர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து தெரிவித்துள்ளாள். இதனை கேட்ட சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது மகளை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு, சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து வர்த்தூர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார்.

அதன்பேரில், 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் முதல்வர் புஷ்பராஜை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை ஒயிட்பீல்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அந்த தனியார் பள்ளியில் நேற்று பதற்றமான சூழ்நிலை நிலவியதை தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்