3 முதல்-மந்திரிகளை தந்த ராமநகர் தொகுதியின் ரகசியம்

3 முதல்-மந்திரிகளை தந்த ராமநகர் தொகுதியை பற்றி இங்கு காண்போம்.

Update: 2023-04-15 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய தகவல்களை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அதுபோல் தற்போது 3 பேருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கிய ராமநகர் மாவட்டத்தின் ரகசியம் குறித்து இங்கு காண்போம்.

நாடு சுதந்திர அடைந்து 76 ஆண்டுகள் ஆகிய நிலையில் கர்நாடக மாநிலம் இதுவரையில் 27 முதல்-மந்திரிகளை கண்டுள்ளது. ஒவ்வொரு முதல்-மந்திரியும் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும், வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ளனர். ஆனால் 3 பேருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கிய பாக்கியம் ராம்நகர் மாவட்டத்தைச் சேரும். அதில் அந்த 3 முதல்-மந்திரிகளும் ஒக்கலிக சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.

கர்நாடகத்தின் முதலாவது முதல்-மந்திரியான கே.சி.ரெட்டி முதல் தற்போதைய முதல்-மந்திரியான பசவராஜ் பொம்மை வரை ஒவ்வொருவரும் வெவ்வேறு தொகுதிகள், மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. மைசூரு மாவட்டத்தில் இருந்து தேவராஜ் அர்ஸ்-சித்தராமையா, சிவமொக்காவில் இருந்து பங்காரப்பா-எடியூரப்பா, கலபுரகியில் இருந்து வீரேந்திர பட்டீல்-தரம்சிங், தார்வாரில் இருந்து எஸ்.ஆர்.பொம்மை-ஜெகதீஷ் ஷெட்டர், பாகல்கோட்டையில் இருந்து நிஜலிங்கப்பா-பி.டி.ஜத்தி ஆகியோர் முதல்-மந்திரி பதவிகளை அலங்கரித்துள்ளனர். சிக்காவி தொகுதியில் இருந்து 1962-ம் ஆண்டு எச்.நிஜலிங்கப்பாவும், தற்போது பசவராஜ் பொம்மையும் எம்.எல்.ஏ.வாகி முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துள்ளனர்.

ஆனால் 1952-ம் ஆண்டு ராமநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கெங்கல் ஹனுமந்தய்யா முதல்-மந்திரி ஆனார். அதுபோல் 1983 மற்றும் 1988-ம் ஆண்டுகளில் தேர்தலில் வெற்றிபெற்றும் முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த தேவேகவுடா, 1994-ல் ராமநகரில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் அவருக்கு முதல்-மந்திரி பதவியும் கிடைத்தது. அதுமுதல் தேவேகவுடாவின் குடும்பத்தினருக்கு ராமநகர் மாவட்டம் அதிர்ஷ்ட மாவட்டமாக விளங்கியது. 2004-ம் ஆண்டு ராமநகர் போட்டியிட்டு வெற்றிபெற்ற குமாரசாமியும், திடீரென நிகழ்ந்த அரசியல் பரபரப்புகளால் முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தார். அதையடுத்து 2018-ம் ஆண்டும் ராமநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிகண்ட அவர் முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார். 2018-ம் ஆண்டு தேர்தலில் வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்ட ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு முதல்-மந்திரி பதவி தேடி வந்தது.

இப்படி ராமநகர் தொகுதியில் ரகசியத்தைப் பார்த்த அரசியல் தலைவர்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்