மராட்டிய புதிய கவர்னராக ரமேஷ் பயஸ் பதவி ஏற்பு

மராட்டியத்தின் புதிய கவர்னராக ரமேஷ் பயஸ் பதவி ஏற்றார்.;

Update: 2023-02-18 21:10 GMT

ரமேஷ் பயஸ் நியமனம்

மராட்டிய கவர்னராக இருந்த பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். மாநிலத்தின் புதிய கவர்னராக ஜார்கண்ட் மாநில கவர்னராக இருந்த ரமேஷ் பயசை கடந்த வாரம் நியமித்தார். இதைத்தொடர்ந்து கவர்னர் பதவி ஏற்பதற்காக ரமேஷ் பயஸ் நேற்று முன்தினம் மும்பை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வரவேற்றார்.

பதவி ஏற்றார்

இந்தநிலையில் மும்பை ராஜ்பவன் மைய அரங்கில் புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. விழாவில் மராட்டியத்தின் 20-வது கவர்னராக ரமேஷ் பயஸ் பதவி ஏற்றார். அவருக்கு மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காப்பூர்வாலா பதவி பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ரமேஷ் பயஸ் மராத்தி மொழியில் பதவி ஏற்றுக்கொண்டார். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பூங்கொத்து கொடுத்து புதிய கவர்னர் ரமேஷ் பயசுக்கு வாழ்த்து கூறினார்.

விழாவில் கவர்னரின் மனைவி ரமாபாய் பயஸ், மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே, மாநில சுற்றுலா துறை மந்திரி மங்கல் பிரதாப் லோதா, சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், ஓய்வுபெற்ற லோக்ஆயுக்தா நீதிபதி வித்யாசாகர் கனடே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வாழ்க்கை குறிப்பு

மராட்டியத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்று உள்ள ரமேஷ் பயஸ் அப்போதைய மத்திய பிரதேச மாநிலம் ராய்பூரில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி பிறந்தார். சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். 1978-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்து கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 7 முறை ராய்பூர் தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்று உள்ளார்.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய இணை மந்திரியாக பதவி வகித்து உள்ளார். 2019-ம் ஆண்டு திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநில கவர்னராக இருந்த இவர், தற்போது மராட்டியத்தின் கவர்னராகி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்