ஜம்மு-காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு!
சுரங்கப்பாதை சரிந்து ஏற்பட்ட விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.;
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் உள்ள கூனி நல்லாவில் மே 19 அன்று சுரங்கப்பாதை சரிந்து ஏற்பட்ட விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்துக்கு உட்பட்ட கூனி நல்லா பகுதிக்கு அருகே புதிதாக சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வரும் இந்த பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு-பகலாக பணியாற்றி வருகின்றனர். இதில் ராட்சத எந்திரங்கள் மற்றும் லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சுரங்கப்பாதையின் ஒரு பகுதி மே 19 அன்று, இரவு சுமார் 10.15 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. சம்பவம் நடந்தபோது மொத்தம் 13 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் வேலை செய்து கொண்டிருந்தனர். மூன்று பேர் காயமடைந்த நிலையில், 10 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து, நள்ளிரவிலேயே தொடங்கிய மீட்புப் பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. தொழிலாளர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்நிலையில், மீதமுள்ள 10 பேரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்(என் ஹச் ஏ ஐ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுரங்கப்பாதை சரிவுக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட குழு ஏற்கனவே விபத்து நடந்த இடத்திற்கு சென்றுள்ளது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐஐடி டெல்லியை சேர்ந்த பேராசிரியர் ஜேடி சாஹு இந்தக் குழுவின் தலைவராக இருப்பார். மேலும் 10 நாட்களுக்குள் இந்த குழு அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும்.
இச்சம்பவம் சாலை அமைக்கும் வேலையின் காரணமாக நடந்ததா அல்லது இயற்கையாக நடந்ததா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.15 லட்சம் இழப்பீடு தொகை கான்டிராக்டர் தரப்பில் இருந்து வழங்கப்படும். மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் சார்பாக ரூ.1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.