ஜெகதீப் தன்கர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஜெயா பச்சன் எம்.பி. காட்டம்

மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர், சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சன் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

Update: 2024-08-09 14:50 GMT

புதுடெல்லி,

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை, ஆளும் கட்சியினர் அவரை தவறான முறையில் பேசுகின்றனர். அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை' என்று காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் கூறினார். தொடர்ந்து, ஜெகதீப் தன்கர், சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சன் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயா பச்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உறுப்பினர்களை மரியாதை குறைவாகப் பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் பேசும் விதமும் ஏற்க முடியாதவையாக இருக்கின்றன. நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. பள்ளி மாணவர்களும் அல்ல. எங்களில் பலர் மூத்த குடிமக்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அவரது மைக்கை அவைத் தலைவர் அணைத்தார். அவர் எவ்வாறு அப்படி செய்யலாம்? எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச அனுமதித்திருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் ஜெகதீப் தன்கர் வரம்பு மீறி பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளை பொதுவெளியில் சொல்ல முடியாது. சில நேரங்களில் உங்களால் தொல்லையாக இருக்கிறது எனக் கூறுகிறார். உங்களுக்கு புத்தி குறைபாடு உள்ளது என்கிறார்.

நீங்கள் திரைப்பட பிரபலமாக இருக்கலாம்; அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என என்னைப் பார்த்து ஜெகதீப் தன்கர் கூறினார். நான் 5வது முறை நாடாளுமன்ற உறுப்பினர். நான் என்ன சொல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். தற்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசப்படும் முறை முன்பு இல்லாதது. என்னைப் பற்றி ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் பேசியதற்காக ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்