கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் இன்று அஞ்சலி
கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு எதிரான போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று மலரஞ்சலி செலுத்தினார்.;
புதுடெல்லி,
லடாக்கின் கிழக்கே சீன ராணுவம் ஊடுருவிய சூழலில், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ந்தேதி அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய இந்த சண்டையில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் சுமார் 35 பேரும் கொல்லப்பட்டனர். இந்த மோதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டது. இதனால் இந்திய-சீன எல்லை நெடுகிலும் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. அதேநேரம் பேச்சுவார்த்தை மூலம் பதற்றம் தணிந்து அமைதி ஏற்பட இரு நாடுகளும் தீவிரம் காட்டின.
இதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பில் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இரு தரப்பும் படைகளை விலக்கி கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
இதேபோன்று, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக இரு தரப்பிலும் பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுபற்றி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டின் கவுரவத்திற்காக தைரியமுடன் போரிட்டு தங்களது உயிரை 2020ம் ஆண்டு, ஜூன் 15-16 அன்று நீத்த கல்வான் நாயகர்களை நினைவுகூர்கிறேன்.
அவர்களது தைரியம், துணிச்சல் மற்றும் உயரிய தியாகம் ஒருபோதும் மறக்கப்படமாட்டாது. அந்த தைரியம் நிறைந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.
இதுவரை இரு நாடுகளுக்கு இடையே தளபதிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. அடுத்த கட்ட சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என கடந்த மே மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது. இதற்காக இரு தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளன.