மாலத்தீவு அதிபருடன் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை விரைவு ரோந்து கப்பலை பரிசளித்தார்

மாலத்தீவு அதிபருடன் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். மாலத்தீவுக்கு இந்தியாவின் பரிசாக விரைவு ரோந்து கப்பலை ஒப்படைத்தார்.

Update: 2023-05-02 23:45 GMT

மாலே,

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 3 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் மாலத்தீவுக்கு சென்றார். ராணுவ மந்திரி ஆன பிறகு அவர் மாலத்தீவு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

அவரை மாலே விமான நிலையத்தில் மாலத்தீவு ராணுவ மந்திரி மரியா டிடி வரவேற்றார்.

பின்னர், மரியா டிடியுடன் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித்துடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை அமைந்தது.

இந்நிலையில், நேற்று மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலியை ராஜ்நாத்சிங் சந்தித்தார். இருதரப்பு பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், மாலத்தீவுக்கு விரைவு ரோந்து கப்பலை இந்தியா பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், விரைவு ரோந்து கப்பலை ராஜ்நாத்சிங் ஒப்படைத்தார். மாலத்தீவு அதிபர், அக்கப்பலை மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையில் சேர்த்து விட்டார்.

அதைத்தொடர்ந்து, ராணுவ, சிவில் அதிகாரிகளிடையே ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

இந்தியா-மாலத்தீவு உறவு உண்மையிலேயே சிறப்பானது. காலத்தை கடந்து நமது உறவு நீடிக்கிறது. ஒட்டுமொத்த பிராந்தியமும் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக இந்த உறவு அமைந்துள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பை அதிகரிப்பது இந்த பிராந்தியத்தில் உள்ள இந்தியா, மாலத்தீவு மற்றும் ஒருமித்த கருத்து கொண்ட நாடுகளின் பொறுப்பு ஆகும்.

இந்தியா தனது பாதுகாப்பு திறன்களை அதிகரித்துள்ளது. அதன்காரணமாக, நட்பு நாடுகளின் திறன் கட்டமைப்பு முயற்சிகளுக்கு இந்தியா உதவ முடிகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்