இடது சிறுநீரகத்துக்கு பதில் இளம்பெண்ணின் வலது சிறுநீரகம் அகற்றம்: தவறான ஆபரேஷனால் விபரீதம்
ஒரு இளம்பெண்ணுக்கு பாதிக்கப்பட்ட இடது சிறுநீரகத்தை ஆபரேஷன் செய்து அகற்றுவதற்கு பதிலாக, அவரது வலது சிறுநீரகம் அகற்றப்பட்டது
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜூன்சுனு மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர், ஈத் பானு (வயது 30) அவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை மாவட்ட தலைநகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பானுவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இடது சிறுநீரகம் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதை ஆபரேஷன் மூலம் அகற்ற வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்கள்.
அதன்படி கடந்த 15-ந்தேதி டாக்டர் சஞ்சய் தன்கார் என்பவர் தலைமையில் அவருக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து சிறுநீரகம் அகற்றப்பட்டது.
இருந்தாலும் ஆபரேஷனுக்கு பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதனால் அவரை ஜெய்ப்பூரில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு அவருடைய உறவினர்களுக்கு டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள். அதனால் பதற்றம் அடைந்த பானுவின் உறவினர்கள் அவரை ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு, ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
அரசு டாக்டர்கள் பானுவை பரிசோதித்துப் பார்த்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்த மருத்துவக் குறிப்புகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அவருக்கு நோயால் பாதிக்கப்பட்ட இடது சிறுநீரகத்தை அகற்றுவதற்கு பதிலாக, நல்ல நிலையில் இயங்கி வந்த வலது சிறுநீரகத்தை ஆபரேஷன் மூலம் அகற்றி இருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பானுவுக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓரளவுக்கு உடல்நிலை தேறி வந்தார். இனி வீட்டுக்கு அவரை அனுப்பலாம் என்று டாக்டர்கள் கருதிய வேளையில், மீண்டும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. உடலில் வீக்கம் ஏற்பட்டது.
நோயின் தீவிரம் கருதி உடனடியாக அவர் வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு பானுவுக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே பானுவுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஆஸ்பத்திரிக்கும் 'சீல்' வைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் எடுத்து இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் 2 சிறுநீரகங்கள் உண்டு. அதில் ஒன்று பாதித்தாலும் இன்னொன்று உதவியுடன் உயிர் வாழ முடியும்.
பானுவைப் பொறுத்த அளவில் நோயால் ஒரு சீறுநீரகத்தையும், டாக்டர்களின் கவனக்குறைவால் இன்னொரு சிறுநீரகத்தையும் இழந்து தவித்து வருவது வேதனை தருவதாக இருக்கிறது.