ராஜஸ்தான்: நஞ்சான உணவை ஆசிரமத்தில் சாப்பிட்ட 3 பேர் பலி; 15 பேருக்கு சிகிச்சை
ராஜஸ்தானில் ஆசிரமத்தில் நஞ்சான உணவை சாப்பிட்டதில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 15 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கோட்டா,
ராஜஸ்தானில் கோட்டா நகரில் அப்னா கர் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் முதியோர், உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட பலர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், சிலருக்கு இன்று காலை வாந்தி வந்துள்ளது. சிலர் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்லை. இதன்பின்னரே 3 பேர் உயிரிழந்து கிடந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் ஓம் பிரகாஷ் பங்கர் கூறும்போது, உணவு நஞ்சாகி உள்ளது என தெரிய வந்துள்ளது.
இதில் 3 பேர் உயிரிழந்தும், 15 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என்றும் கூறியுள்ளார். அவர்கள் தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
சம்பவ பகுதிக்கு மருத்துவ குழுவும் சென்றுள்ளது. உணவு மற்றும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. நிலத்தடி நீரே இதற்கு காரணம் என நான் நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.