மாமியாருக்கு இலவச ரேஷன் பொருட்களை கொடுக்கக்கோரியதால் 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை

மாமியார் வீட்டிற்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கக்கோரியதால் ஆத்திரமடைந்த பெண் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-06-12 13:23 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பர்மீர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷகூர் கான். இவரது மனைவி ரஹ்மத் (வயது 28) இந்த தம்பதிக்கு மரியன் என்ற மகளும், யாசின் என்ற மகனும் உள்ளனர்.

இதனிடையே, ஷகூர் கானின் தாய் மற்றும் தந்தையும் அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர். ஷகூர் கானின் குடும்பத்திற்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைத்து வருகிறது.

இந்த இலவச ரேஷன் பொருட்களை தனது தாயாரிடம் கொடுக்கும்படி ஷகூர் கான் மனைவி ரஹ்மத்திடம் கூறியுள்ளார். ஆனால், ரேஷன் பொருட்களை மாமியார் மற்றும் மாமனார் வீட்டிற்கு கொடுக்க ரஹ்மத் மறுத்துள்ளார். இதனால், ரஹமத்திற்கும் அவரது கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாமியாருக்கு ரேஷன் பொருட்களை கொடுக்குமாறு கூறி கணவர் தன்னிடம் சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த ரஹ்மத் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். ரஹ்மத் நேற்று இரவு தனது 2 குழந்தைகளுடன் வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டிக்கு சென்றுள்ளார். அங்கு குடிநீர் தொட்டிக்குள் தனது 2 குழந்தைகளையும் வீசிய ரஹ்மத் தானும் அதற்குள் குதித்துள்ளார். பின்னர், 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து இன்று காலை தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஷகூர் கான் மற்றும் அவரது தாயார், தந்தை உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்