உத்தர பிரதேச சட்டசபைக்குள் புகுந்த மழைநீர்
கனமழையை தொடர்ந்து உத்தர பிரதேச சட்டசபை கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்தது.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநில சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதனிடையே மாநில தலைநகரான லக்னோவின் பல்வேறு பகுதிகளில் இன்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த நிலையில், உத்தர பிரதேச சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் விதான் சபா கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்தது. கட்டிடத்தின் நுழைவாயில், தாழ்வாரம் மற்றும் தரைத்தளத்தில் உள்ள சில அறைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தேங்கி நின்ற மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதே சமயம் சட்டசபை அமர்வுகள் நடைபெறும் அமர்வுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சட்டசபை கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சிவ்பால் சிங் யாதவ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மாநில சட்டசபைக்கு அதிக பட்ஜெட் தேவைப்படுகிறது. ஒரு கனமழைக்கே இந்த நிலை என்றால், மாநிலத்தின் பிற பகுதிகள் மீது கடவுள்தான் கருணை காட்ட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.