மழையால் டெல்லியில் சற்று மேம்பட்ட காற்றின் தரம்
காற்று மாசுபாட்டால் டெல்லி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.;
புதுடெல்லி,
கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு அதிகமாக உள்ளது. காற்றின் தரக்குறியீடு 300-க்கு மேல் இருந்தாலே அது மோசமானது ஆகும். ஆனால் தற்போது 400-க்கு மேல் உள்ளது. இதனால் நுரையீரல் பிரச்சினை உள்ளிட்ட மிக கடுமையான பாதிப்புகளை டெல்லி மக்கள் சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பனிப்பொழிவு இருந்து வருகிறது. ஆனால் காற்றின் மாசுத்துகளோடு சேர்ந்து அது நச்சுப்பனியாக மாறி இருக்கிறது. இப்படி நச்சு கலந்த மூடுபனியுடனேயே நேற்றைய காலைப்பொழுது விடிந்தது. காலை 11 மணி வரை இருண்ட வானிலை காணப்பட்டது. அதன்பிறகு சற்று வெயில் அடித்து, பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் இருண்டது.
பனிப்பொழிவு இருந்தாலும், காற்று மாசு காரணமாக குளிரின் தாக்கம் பகலில் அவ்வளவாக இல்லை. இரவில் 12 மணிக்கு பிறகு குளிர் அதிகரிப்பதை உணர முடிகிறது. நேற்றைய நிலவரப்படி குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் இருந்தது.
இந்த நிலையில், டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக தற்போது காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டுள்ளது.