பெங்களூருவில் அதிகபட்சமாக 64.8 மில்லி மீட்டர் மழை பதிவு
பெங்களூருவில் நேற்று முன்தினம் கொட்டி தீர்த்த மழையில், அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 64.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாநிலத்தில் இன்னும் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று முன்தினம் கொட்டி தீர்த்த மழையில், அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 64.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாநிலத்தில் இன்னும் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திடீர் மழை
பெங்களூருவில் கடந்த 2 வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுரங்க சாலைகள், தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மெஜஸ்டிக், யஷ்வந்தபுரம், சேஷாத்திரிபுரம், மல்லேசுவரம், பசவனகுடி, ஜெயநகர், கோரமங்களா, வில்சன் கார்டன், சாந்திநகர், எம்.ஜி.ரோடு, சிவாஜிநகர், நந்தினி லே-அவுட், ராஜாஜிநகர், பெல்லந்தூர், விஜயநகர், ஆர்.ஆர்.நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை பதிவு
நேற்று முன்தினம் பெங்களூரு நகரில் 64.8 மில்லி மீட்டர்(மி.மீ.) மழை பதிவாகி உள்ளது. எச்.ஏ.எல். பகுதியில் 52 மி.மீட்டரும், மாரத்தஹள்ளியில் 49.5 மி.மீட்டர், கோனனகுன்டேவில் 64 மி.மீட்டர் மழை பதிவானது.
இதேபோல் வித்யரண்யபுரா8.5., கொடிகேஹள்ளி 6.5, வர்த்தூர் 2.3 மில்லி மீட்டர் அளவிலும் மழை பதிவானது. நேற்று காலை வரை சுரங்க சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பள்ளி வேன்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டன.
மாநகராட்சி அதிகாரிகள் சுரங்க சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவதி அடைந்துள்ளனர். இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 7-ந் தேதி வரை 6 நாட்களுக்கு பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.