ரெயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கான இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிப்பு - ரெயில்வே வாரியம் அறிவிப்பு
ரெயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கான இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிகரிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.;
புதுடெல்லி,
ரெயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தற்போது ரெயில்வே ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குகிறது. இதைப்போல பலத்த காயமடைவோருக்கு ரூ.25 ஆயிரமும், லேசான காயமடைவோருக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த தொகையை தற்போது 10 மடங்கு அதிகரித்து ரெயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
அந்தவகையில் ரெயில் விபத்து மரணங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பலத்த காயமடைவோருக்கு ரூ.2.50 லட்சமும், லேசான காயமடைவோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைப்போல ரெயில்களில் நடைபெறும் பயங்கரவாதம், கொள்ளை சம்பவங்கள், வன்முறை நிகழ்வுகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பலத்த காயமடைவோருக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயமடைவோருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். முன்னதாக இது முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.5 ஆயிரமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.