காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
பெங்களூரு:
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
காங்கிரஸ் பிரமுகர்
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ேம) 10-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு பத்மநாபநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் குரப்பா நாயுடு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவருக்கு டிக்கெட் கிடைக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று பனசங்கரி 2-வது ஸ்டேஜ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
வருமானவரி சோதனை
நேற்று காலை 7 மணி அளவில் 3 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இதில் சில ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சோதனை இரவு வரை நீடித்தது. ஆனால் சோதனையில் நகை, பணம் சிக்கியதா என்பது பற்றி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இதேபோல் அவருக்கு நெருங்கிய தொடர்பில் உள்ள பசப்பா என்பவரின் வீடுகளிலும் வருமானவரி அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இவர் பெங்களூரு அவென்யூ சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
பரபரப்பு
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளதால், பா.ஜனதா அரசு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை காங்கிரஸ் தலைவர்கள் மீது ஏவிவிடுவார்கள் என மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று முன்தினம் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.