பறக்கும் முத்தம் விவகாரம்: 'ராகுல் காந்தி பெண்களை அவமதிக்கவில்லை' - காங்கிரஸ் மறுப்பு

பறக்கும் முத்தம் விவகாரத்தில் ராகுல் காந்தி பெண்களை அவமதிக்கவில்லை என்று காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2023-08-09 19:25 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பின்னர் ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பா.ஜனதா எம்.பி.க்களை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்ததாக சர்ச்சை கிளம்பியது.

இது குறித்து பா.ஜனதாவின் பெண் எம்.பி.க்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் பெண் எம்.பி.க்களை ராகுல் காந்தி அவமதிக்கவில்லை எனவும், இந்த விவகாரத்தில் பா.ஜனதா அநாகரிக அரசியல் செய்வதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மக்களவை காங்கிரஸ் கொறடா, மாணிக்கம் தாகூர் கூறுகையில், 'ஸ்மிரிதி இரானி ராகுல் குறித்த அச்சத்தால் அவதிப்படுகிறார். அவர் அதில் இருந்து வெளியே வர வேண்டும்' என கூறினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், 'இந்திய ஒற்றுமை பயணம் முழுவதும், அதில் பங்கேற்றவர்கள் மற்றும் அதைப் பார்த்தவர்கள் அனைவரும் பறக்கும் முத்தத்தை மனிதநேயம், அன்பு மற்றும் பாசத்தின் அடையாளமாக வழங்கினார்கள். ஆனால் மனதில் எதையோ நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் இதை தவறாக கருதுகிறார்கள்' என குற்றம் சாட்டினார்.

சிவசேனாவை (உத்தவ்) சேர்ந்த பெண் எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி, 'ராகுல் காந்தியின் செயலை நானும் பார்த்தேன். அது பாசத்தின் வெளிப்பாடு. ஆனால் பா.ஜனதாவால் அன்பை ஏற்க முடியாது' என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்