ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் - பா.ஜனதா எம்.எல்.ஏ சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு
மேல்முறையீட்டு மனுவை எச்சரிக்கும் வகையில் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.;
புதுடெல்லி,
அவதூறு வழக்கில் குற்றவாளி என்ற சூரத் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே. மிஷ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை கடந்த 21-ந்தேதி விசாரித்தது. மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு 4-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்நிலையில் புர்னேஷ் மோடி சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அபூர்வமானதாக கருத முடியாது. நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ஜாமீனில் இருக்கும் ராகுல் காந்தி, சாவர்க்கரை அவதூறு செய்ததாக வழக்கை எதிர்கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் தண்டித்த போது வருத்தம் தெரிவிக்காமல், தான் சாவர்க்கர் இல்லை என்றும் காந்தி என்றும் தன்னை பறைசாற்றிக்கொண்டார்.
ஓர் சமூகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்காமல் அவரது மேல்முறையீட்டு மனுவை எச்சரிக்கும் வகையில் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.