காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியில்லை: காங்கிரஸ் வட்டாரம் தகவல்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடமாட்டார் என காங்கிரஸ் வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

Update: 2022-09-20 13:39 GMT


புதுடெல்லி,


காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வருகிற அக்டோபர் 17-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிற காங்கிர மூத்த தலைவர்களும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சசிதரூர் நேற்று சந்தித்தார். டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூருக்கு சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். 'காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உங்கள் முடிவு. தேர்தல் நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெறும்' என சசிதரூரிடம் சோனியா காந்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ள யாரும் போட்டியிடலாம். அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

இதுவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் உறுதியான நிலை. இது ஒரு வெளிப்படையான, ஜனநாயக மற்றும் திறந்த நிலையிலான நடைமுறை. தேர்தலில் போட்டியிட யாரும், யாருடைய ஒப்புதலையும் பெற வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரையானது கேரளாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 29-ந்தேதி கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்குள் யாத்திரை பயணிக்க தொடங்கும்.

எனினும், வேட்பு மனுவுக்கான இறுதி நாள் செப்டம்பர் 30 என அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி நோக்கிய இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருந்து ராகுல் காந்தி திரும்பமாட்டார் என்றும் அதனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடமாட்டார் எனவும் காங்கிரஸ் வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்