'அரசியலமைப்பை பாதுகாப்பதாக ராகுல் காந்தி ஆஸ்கர் அளவிற்கு நடிக்கிறார்'- பி.ஆர்.எஸ். கட்சி விமர்சனம்

அரசியலமைப்பை பாதுகாப்பதாக ராகுல் காந்தி ஆஸ்கர் அளவிற்கு நடிக்கிறார் என பி.ஆர்.எஸ். கட்சி விமர்சித்துள்ளது.

Update: 2024-07-09 13:14 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.அர்.எஸ். கட்சியில் இருந்து இதுவரை 7 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.எல்.சி.க்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருவதாகவும், அரசியலமைப்பை பாதுகாப்பதாக ராகுல் காந்தி ஆஸ்கர் அளவிற்கு நடிக்கிறார் என்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவரும், சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"ஒருபுறம் ராகுல் காந்தி அரசியல் சாசனத்தின் நகலுடன் சுற்றி வருகிறார், மறுபுறம் அவரது கட்சி அரசியல் சாசனத்தை இழிவுபடுத்துகிறது. அரசியலமைப்பை பாதுகாப்பதாக ராகுல் காந்தி ஆஸ்கர் அளவிற்கு நடிக்கிறார்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வால் பாதிக்கப்பட்ட அனைவரும் கட்சி மாறும் விவகாரத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். இது தொடர்பான சட்டப் போராட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். பி.ஆர்.எஸ். கட்சியை விட்டு விலகிய உறுப்பினர்களுக்கு எதிரான மனு ஏற்கனவே தெலுங்கானா ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

2020-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களின் நிலை குறித்து முடிவெடுக்க சட்டமன்ற சபாநாயகருக்கு மூன்று மாதங்கள் அவகாசம் உள்ளது. சபாநாயகர் நீதி வழங்கவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம். இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்