தமிழகம் உள்பட 6 மாநில விவசாயிகளுடன் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லி நாடாளுமன்ற இல்ல வளாகத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விவசாய தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து பேசினர்.

Update: 2024-07-24 10:48 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இதுவாகும்.

எனினும், எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதனை கண்டிக்கும் வகையில், நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து செல்லும் வழியில், எதிர்க்கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற இல்லத்திற்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், பட்ஜெட் நிதி ஒதுக்கீடு விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, இரு அவைகளிலும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரண்டு அவைகளில் இருந்தும் இன்று வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு ஒரு குழுவாக இன்று சென்றிருந்தனர்.

அவர்கள், நாடாளுமன்ற இல்ல வளாகத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை இன்று நேரில் சந்தித்து பேசினர். இந்த குழுவில் விவசாய தலைவர்கள் 12 பேர் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோன்று அக்கட்சியின் பிற தலைவர்களான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, குர்ஜித் சிங் ஆஜ்லா, தரம்வீர் காந்தி, அமர் சிங், தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் ஜெய் பிரகாஷ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பில், தங்களுடைய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை பற்றி அவர்கள் ராகுல் காந்தியிடம் எடுத்துரைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்