இந்தியாவை பிரிக்க மக்களை தூண்டி விடுகிறார் ராகுல் காந்தி: கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு

ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும். ஆனால், வெளிநாட்டினருக்கு தெரியாது என மத்திய மந்திரி ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.

Update: 2023-03-09 08:48 GMT



புதுடெல்லி,


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு மற்றும் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தினார். கடந்த ஜனவரி இறுதியில் இந்த பாதயாத்திரை நிறைவடைந்தது.

இந்நிலையில், ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார்.

இதன்பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என ராகுல் காந்தி பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியர்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என்றும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இங்கிலாந்தில் அவர் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயக ரீதியில் போட்டியிடும் இயல்பு முற்றிலும் மாறி விட்டது. அதற்கான காரணம் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரேயொரு அமைப்புதான். அடிப்படைவாத, பாசிச கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்து இந்திய அமைப்புகளையும் தனது பிடிக்குள் வைத்து உள்ளது என கூறினார்.

இந்தியாவில் பத்திரிகை துறை, நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு வழியிலோ அல்லது வேறு வகையிலோ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.

ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் அரசு அமைப்புகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்களே, கேட்டு பாருங்கள். என்னுடைய மொபைல் போனில் பெகாசஸ் (ஒட்டு கேட்கும் விவகாரம்) உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதெல்லாம் நடக்கவில்லை என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்நிலையில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியில், தன்னை இளவரசராக அறிவித்து கொண்ட ராகுல் காந்தி அனைத்து எல்லைகளையும் மீறி விட்டார்.

இந்தியாவின் ஒற்றுமைக்கு தீவிர ஆபத்து நிறைந்த மனிதராக அவர் மாறி இருக்கிறார். அவர் தற்போது, இந்தியாவை பிரிக்க மக்களை தூண்டி விடும் வேலையை செய்து வருகிறார்.

இந்தியாவின் மிக பிரபலம் வாய்ந்த மற்றும் அன்பு செலுத்தப்படுகிற மதிப்பு மிக்க பிரதமர் மோடியின் ஒரே மந்திரம் என்னவென்றால், ஒரே இந்தியா, வளர்ச்சிக்கான இந்தியா என்பதே ஆகும் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மற்றொரு டுவிட்டர் பதிவில், ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும். ஆனால், வெளிநாட்டினருக்கு உண்மையில் ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது தெரியாது.

அதனுடன், அவரது முட்டாள்தன பேச்சுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஆனால் சிக்கல் என்னவென்றால், அவரது இந்திய எதிர்ப்பு பேச்சுகள், இந்தியாவின் மீதுள்ள பொதுவான எண்ணத்திற்கு களங்கம் உண்டாக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான சக்திகளால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்