இந்தியாவைப் பற்றி அவதூறாக பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு

நாட்டை அவமதிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.;

Update:2023-03-16 15:10 IST

புதுடெல்லி,

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

லண்டனில் பல்கலைகழகத்தில் ராகுல் காந்தி இந்தியாவிற்கு எதிராக உள்ளவர்கள் பேசுவதைப் போல் பேசி இருக்கிறார். தனது பேச்சுக்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை மன்னிப்பு கேட்க வைப்பது நமது கடமை. அவர் தனது செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வாரென்றால் அதில் எங்களுக்கு எந்த விதமான அக்கறையும் இல்லை.

இந்தியாவைப் பற்றி அவதூறாகப் பேச அவருக்கு உரிமை இல்லை. எங்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. தேசத்தைப் பற்றிய எந்த ஒரு விஷயமும் அனைவருக்கும் கவலையளிக்கவே செய்யும். நாட்டை அவமதிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டார்கள். அதற்காக அவர்கள் நாட்டை விமர்சிக்கலாம் என்று அர்த்தமில்லை.

ராகுல் காந்தி இந்தியாவைப் பற்றி லண்டனில் பேசியவை அனைத்துமே பொய். முதலில் அவர், தனக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதி வழங்கப்படவே இல்லை என்றார். இது முற்றிலும் தவறான ஒன்று. ராகுல் காந்தி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரமும் சுதந்திரமாகவும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். ராகுல் காந்தி யார் என்பது இந்தியர்களுக்குத் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்