காங்கிரஸ் நிறுவன நாளை தாயாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாளை தனது தாயார் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் அக்கட்சியின் 138-வது நிறுவன நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் முன்னாள் இடைக்கால தலைவரான சோனியா காந்தி கலந்து கொண்டார்.
இதில், இந்திய ஒற்றுமை யாத்திரை எனப்படும் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றுள்ள வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அவர் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தாயார் சோனியா காந்தியின் அருகே அமர்ந்து, விளையாட்டாக அவரிடம் பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் கலந்து கொண்டார். இந்தியாவின் அடிப்படை விசயங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன என நிகழ்ச்சியில் பேசியபோது குறிப்பிட்ட கார்கே, சமூகம் வெறுப்புணர்வால் பிரிந்து இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.