அவதூறு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு
குஜராத் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் காரணமாக ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து, ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், குஜராத் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக தற்போது ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.