காதலை முறித்து கொண்டதால் ஆத்திரம்: கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை - காதலன் கைது

பெங்களூருவில், காதலை முறித்து கொண்ட ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.;

Update: 2023-01-19 05:25 GMT

பெங்களூரு எலகங்கா தாலுகா ராஜனகுண்டே அருகே ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் மதுசந்திரா(வயது 26). டிரைவரான இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. இதுபோல ராஜனகுண்டே அருகே சானுபோகனஹள்ளியில் வசித்து வந்தவர் ராஷி(வயது 19). இவர் எலகங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் மதுசந்திராவுக்கும், ராஷிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து ராஷியை, மதுசந்திரா காதலித்து வந்தார். அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யவும் முடிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுசந்திராவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது பற்றி ராஷிக்கு தெரியவந்தது. இதனால் அவர் மதுசந்திராவுடனான காதலை முறித்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு ராஷி வீட்டிற்கு வந்தார். அப்போது மேய்ச்சலுக்காக விடப்பட்டு இருந்த மாட்டை அழைத்து வரும்படி ராஷியிடம், அவரது தாய் கூறினார். இதனால் மாட்டை அழைத்து வர ராஷி சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த மதுசந்திரா காதலை முறித்து கொண்டது பற்றி ராஷியிடம் கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. இந்த சந்தர்ப்பத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஷியை, மதுசந்திரா சரமாரியாக குத்தினார். இதில் வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த ராஷி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்ததும் ராஷியின் குடும்பத்தினர் அங்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அங்கு வந்த ராஜனகுண்டே போலீசார் ராஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எலகங்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து ராஜனகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மதுசந்திராவை நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்