வரலாற்றில் முதல் முறை: குடியரசு தினவிழாவில் கடமை பாதையில் டெல்லி போலீசார் பெண்கள் பிரிவு அணிவகுப்பு

பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-01-10 08:15 GMT

டெல்லி,

நாட்டின் 75வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தின்போது டெல்லியில் உள்ள கடமை பாதையில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெறும்.

இந்த அணிவகுப்பில் டெல்லி போலீசார் சார்பிலும் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு கடமை பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் டெல்லி போலீசார் தரப்பில் பெண் போலீசார் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி ஸ்வேதா தலைமையில் பெண் கான்ஸ்டபிள்கள் 194 பேர் டெல்லி போலீஸ் சார்பில் குடியரசு தினவிழாவில் கடமை பாதையில் அணிவகுப்பு நடத்த உள்ளனர். டெல்லி போலீஸ் அணிவகுப்பில் இடம்பெற்றுள்ள போலீசாரில் 80 சதவீதம் பேர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அணிவகுப்பில் பெண்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குடியரசு தின விழாவில் கடமை பாதையில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்