கத்தார் உலகக்கோப்பை - கேரளாவில் சூடுபிடித்த மது விற்பனை...!
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி அன்று கேரளாவில் மது விற்பனை சூடுபிடித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கத்தாரில் கடந்த 18-ந் தேதி இரவு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.
இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடந்த அந்நாளில் மட்டும், கேரளாவில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக கேரள மதுபான விற்பனை மைய தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த விற்பனை வழக்கத்தை விட ரூ.15 கோடி அதிகம் எனவும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.