மந்திரிசபை முடிவுக்கு கட்டுப்பட்டவர், கவர்னர் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி கருத்து

மந்திரிசபை முடிவுக்கு கட்டுப்பட்டவர் கவர்னர் என்றும், கொள்கைகளில் மாறுபாடு இருந்தாலும் மக்கள் நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.;

Update: 2023-02-28 23:45 GMT

நாட்டில் பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளுகிற பல மாநிலங்களில் கவர்னர்களுக்கும், முதல்-மந்திரிகளுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

கவர்னர் கேள்வி

இந்த வகையில், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிற பஞ்சாப் மாநிலத்திலும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும், முதல்-மந்திரி பக்வந்த் மானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், அங்கு 36 அரசு பள்ளிக்கூடங்களின் முதல்வர்களை சிங்கப்பூருக்கு பயிற்சிக்கு அனுப்பியது தொடர்பாக கவர்னர் புரோகித் கேள்வி எழுப்பி முதல்-மந்திரி பக்வந்த் மானுக்கு கடந்த மாதம் 13-ந் தேதி கடிதம் எழுதினார். குறிப்பாக, எந்த அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் என அவர் கேட்டிருந்தார். மேலும், பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அதிலும் பிரச்சினை எழுப்பி இருந்தார். இப்படி பல்வேறு பிரச்சினைகளை கவர்னர் எழுப்பி இருந்தார்.

முதல்-மந்திரி பதில்

அதற்கு முதல்-மந்திரிபக்வந்த் மான், " நான் 3 கோடி பஞ்சாபியர்களுக்குத்தான் பதில் சொல்ல கடமைப்பட்டவன். மத்திய அரசால் நியமிக்கப்படுகிற கவர்னருக்கு அல்ல" என சூடாக பதில் அளித்தார்.

அதுமட்டுமின்றி, கவர்னர்கள் நியமனத்தில் மத்திய அரசின் அளவுகோல் பற்றியும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

சட்டசபையை கூட்ட மறுப்பு

இந்த நிலையில் பட்ஜெட் தாக்கலுக்காக சட்டசபையை மார்ச் 3-ந் தேதி கூட்டுவது என முதல்-மந்திரி பக்வந்த் மான் தலைமையில் மந்திரிசபை முடிவு எடுத்தது.அது குறித்து முறைப்படி தெரிவித்து, சட்டசபையை 3-ந் தேதி கூட்ட வேண்டும் என்று கவர்னர் புரோகித்துக்கு முதல்-மந்திரி பக்வந்த் மான் கடிதம் எழுதினார்.ஆனால் அந்தக் கடிதத்தின்படி சட்டசபையை கூட்ட கவர்னர் புரோகித் மறுத்தார்.

இது தொடர்பாக அவர் முதல்-மந்திரி பக்வந்த் மானுக்கு எழுதிய கடிதத்தில், " உங்கள் டுவிட்டர் பதிவும், கடிதமும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது மட்டுமல்ல, மிகவும் இழிவானதாகவும் அமைந்திருந்தன. பட்ஜெட்டுக்காக சட்டசபையைக் கூட்டுவது தொடர்பாக சட்ட ஆலோசனையைப் பெற்ற பிறகே உங்கள் கோரிக்கை குறித்து முடிவு எடுப்பேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இது முதல்-மந்திரி பக்வந்த் மானுக்கு அதிர்ச்சி அளித்தது.இதையடுத்து இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடுவது என்று பஞ்சாப் அரசு முடிவு எடுத்தது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் பஞ்சாப் அரசின் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி நேற்று காலை ஆஜராகி முறையீடு செய்தார்.

அப்போது அவர், "பட்ஜெட் கூட்டத்தொடருக்காக மார்ச் 3-ந் தேதி சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்து, கவர்னருக்கு கடிதம் எழுதியது. ஆனால் கவர்னர் சட்டசபையை கூட்ட மறுத்ததுடன், சட்ட ஆலோசனை பெற்றுத்தான் முடிவு எடுப்பேன் என கூறி உள்ளார். உடனடியாக இதில் விசாரணை நடத்த வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதை ஏற்ற நீதிபதிகள், மாலை 3.50 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்தனர்.

நீதிபதிகள் விசாரணை

அதன்படி பஞ்சாப் அரசின் முறையீடு மாலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்னிலையில் பஞ்சாப் அரசின் சார்பில் மூத்த வக்கீல் அபிசேக் சிங்வி ஆஜரானார். அவர் சட்டசபையைக் கூட்ட மறுக்கும் கவர்னரின் செயல் பற்றி குறிப்பிட்டு, " அரசியலமைப்பின் கீழ் அதிகாரம் பெற்றிருப்பவர், அரசியலமைப்பை அறியாமல் செயல்படுகிறார். அவர் அரசியலமைப்பை அபகரிக்கிறார்" என கூறினார்.

கவர்னரின் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர், "கவர்னர் சட்டசபையை கூட்டுவதற்கு ஒரு போதும் மறுக்கவில்லை. அவர் சட்ட ஆலோசனையைப் பெறுகிறேன் என்றுதான் குறிப்பிட்டார். மார்ச் 3-ந் தேதி சட்டசபையைக் கவர்னர் கூட்டி உள்ளார். எனவே பஞ்சாப் அரசின் முறையீடு பயனற்றது" என குறிப்பிட்டார்.

'மந்திரிசபை முடிவுக்கு கட்டுப்பட்டவர்'

இரு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வு கூறியதாவது:-

கவர்னர் கேட்கிற தகவல்களை மாநில அரசு வழங்க வேண்டிய கடமை உண்டு. அதே நேரத்தில் சட்டசபையைக் கூட்டுவது தொடர்பாக மந்திரிசபையின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய கடமை கவர்னருக்கும் உள்ளது. சட்டசபையைக் கூட்டுவது தொடர்பாக கவர்னர் சட்ட ஆலோசனை பெற வேண்டிய தேவையில்லை. அவர் மந்திரிசபையின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவர் ஆவார்.

'கருத்து வேறுபாடுகள் ஏற்கத்தக்கவை'

இந்த கோர்ட்டு பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்துதல் பற்றி அறிந்திருந்தாலும், அரசிலயமைப்பு பதவியில் இருப்பவர்கள் கண்ணியத்துடனும், முதிர்ந்த அரசியல் தன்மையுடனும் நடந்து கொள்ளவேண்டும். குறிப்பாக அரசியலமைப்பின் கீழ் செயல்படுகிறவர்கள் மத்தியில் (மக்கள் நலனுக்காக) சேர்ந்து செயல்படுகிற தன்மை வேண்டும்.

ஜனநாயக அரசியலில் கருத்து வேறுபாடுகள் ஏற்கத்தக்கவைதான். ஆனாலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். இந்தக்கொள்கைகளை மனதில் கொள்ளாதவரையில், அரசியலமைப்பு விழுமியங்களை திறம்பட செயல்படுத்துவது ஆபத்தில் தள்ளப்பட்டு விடும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மாநிலங்களில் கவர்னர்கள், மாநில மந்திரிசபையின் ஆலோசனையின்படிதான் செயல்பட வேண்டும், மந்திரிசபையின் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்ற சுப்ரீம் கோர்ட்டின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்