உடற்பயிற்சிக்கு சென்ற ஆம்ஆத்மி கவுன்சிலர் சுட்டுக்கொலை- பஞ்சாபில் பயங்கரம்
ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள மலேர்கோட்லா மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் முகமது அக்பர். இவர் அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். அங்கு பயிற்சியாளருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஜிம்முக்கு மர்ம நபர் ஒருவர் வந்தார். அந்த நபர் கவுன்சிலர் முகமது அக்பர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பகுதிக்கு சென்றார்.
அவரது அருகில் சென்றதும் அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து முகமது அக்பரை சுட்டார். வெகு அருகில் இருந்து சட்டதால் கவுன்சிலர் முகமது அக்பர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். கவுன்சிலர் முகமது அக்பரின் அலறல் சத்தமும், துப்பாக்கி சத்தமும் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அதற்குள் முகமது அக்பரை சுட்ட நபர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார். இதுபற்றி உடற்பயிற்சி மைய நிர்வாகி போலீசில் புகார் செய்தார். போலீசார் கவுன்சிலர் முகமது அக்பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி முகமது அக்பரை சுட்ட நபர் யார்? எதற்காக சுடப்பட்டார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.