வழக்குகளுக்கு தீர்வு காணாத போலீசாருக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு

போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகளாக பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்தது போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு வந்தது.

Update: 2024-03-07 04:31 GMT

பெங்களூரு,

பொதுவாக பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வீட்டுப்பாடம் எழுதாவிட்டாலும், விளையாட்டு வகுப்புகளில் சரியாக செயல்படா விட்டாலும் பள்ளி வளாகத்தை 10 தடவை சுற்றி ஓட வேண்டும் என்ற தண்டனையை அனுபவித்து இருப்போம். இல்லையெனில் அதுபற்றி கேள்வி பட்டிருப்போம். அதுபோல் வழக்குகளுக்கு தீர்வு காணாத போலீஸ்காரர்கள் முதல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் என அனைவருக்கும் போலீஸ் சூப்பிரண்டு நூதன தண்டனை வழங்கிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் மிதுன் குமார். இவர் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவான வழக்குகளில் 10 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காதது பற்றி விவரம் கேட்டிருந்தார். அதன்படி சிவமொக்கா டவுனில் கோட்டே, ஜெயநகர், சிவமொக்கா பொருளாதார குற்றப்பிரிவு, கும்சி போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகளாக பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்தது தெரியவந்தது.

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் அந்த 4 போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ்காரர்கள், ஏட்டுகள், பெண் போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரை சிவமொக்காவில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு வரவழைத்தார். அவர்களிடம் வழக்குகள் நிலுவையில் இருப்பது பற்றி கேட்டறிந்ததுடன், அவற்றுக்கு இன்னும் ஏன் தீர்வு காணவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு யாரும் சரிவர பதில் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்த போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார், வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணாத அனைத்து போலீசாருக்கும் நூதன தண்டனை வழங்கினார். அதாவது ஆயுதப்படை மைதானத்தை 10 முறை சுற்றி ஓடி வரும்படி உத்தரவிட்டார். அதன்படி ஏட்டுகள், போலீஸ்காரர்கள், பெண் போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மைதானத்தை சுற்றி ஓடினர். சில போலீசார் 3 சுற்றிலேயே ஓட முடியாமல் தவித்தனர். அவர்கள் நடந்தே 10 முறை மைதானத்தை சுற்றி நிறைவு செய்தனர். இந்த சம்பவம் சிவமொக்கா மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்