சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு: ராகுல்காந்தி நேரில் ஆஜராக புனே கோர்ட்டு உத்தரவு

வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்தி நேரில் ஆஜராக புனே கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-06-01 05:33 GMT

புனே,

புனே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவா்க்கர் உறவினர் சாத்யகி சாவர்க்கர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தாா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி லண்டனில் வீர சாவர்க்கருக்கு எதிராக அவதூறாக பேசியதாக சாத்யகி சாவர்க்கர் கூறியிருந்தார். ஒரு முறை வீர சாவர்க்கரும், அவரது நண்பர்களும் இஸ்லாமியர் ஒருவரை அடித்ததாகவும், அதற்காக வீர சாவர்க்கர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் புத்தகம் ஒன்றில் அவர் எழுதி இருந்ததாக ராகுல்காந்தி பேசியிருப்பதாக மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் வீர சாவர்க்கர் இதுபோல எந்த புத்தகத்திலும் எழுதவில்லை, ஆனால் வீர சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருப்பதாகவும் மனுதாரர் கூறியிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புனே போலீசார் இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தி அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். போலீசாரின் அந்த அறிக்கையில், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறியிருந்தனர்.

இதனிடையே, வீர சாவர்க்கர் உறவினர் சாத்யகி சாவர்க்கர் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை புனே கோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்தது. விசாரணையின் போது ராகுல் காந்தி தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

இந்தநிலையில், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்டு 19-ந் தேதிக்கு தள்ளி வைத்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, அன்றைய தினம் ராகுல்காந்தி கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருப்பதாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்