பாடகி பவதாரிணி மறைவுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி இரங்கல்

பவதாரிணி இனிமை வாய்ந்த குரலால் தனித்து நின்றவர் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-26 05:52 GMT

புதுச்சேரி,

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, இதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில் தொடர் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 47. இலங்கையில் இருந்து பவதாரிணியின் உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்நிலையில், பாடகி பவதாரிணி மறைவுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி ஆழ்ந்த வருத்தத்தைத் தருவதாக உள்ளது. காலத்தால் அழியாத பல பாடல்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்த பவதாரிணி இனிமையான தனது தனித்துவம் வாய்ந்த குரலால் தனித்து நின்றவர்.

இசையமைப்பாளராகவும் பரிணமித்த அவர் தனது தந்தையைப் போலவே இசை உலகில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்க வல்லவராகத் திகழ்ந்தார். அவரது திடீர் இழப்பு இசைத் துறையில் ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்