மங்களூருவில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் செல்போனில் வந்த புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுத்த போலீஸ் கமிஷனர்
மங்களூருவில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் செல்போன் மூலம் வந்த புகார்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் உடனே நடவடிக்கை மேற்கொண்டார்.
மங்களூரு-
மங்களூருவில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் செல்போன் மூலம் வந்த புகார்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் உடனே நடவடிக்கை மேற்கொண்டார்.
பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் செல்போன் மூலம் புகார் அளிக்கும், பொதுமக்களின் குறை தீர்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டம் நகர போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் தலைமையில் நடந்தது. அப்போது பொதுமக்கள் செல்போன் மூலம் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்தனர். இந்த புகாரை நகர போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் கேட்டு கொண்டதுடன், அதற்கு உடனே தீர்வு கண்டார்.
அதன்படி நேற்று முன்தினம் நடந்த செல்போன் மூலம் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான புகார்கள் வந்தது. அந்த புகார்களுக்கு உடனே போலீஸ் கமிஷனர் தீர்வு கண்டார். குறிப்பாக முல்கி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் பல நாட்களாக மட்கா சூதாட்டம் நடப்பதாக புகார் வந்தது. இதை கேட்ட போலீஸ் கமிஷனர் உடனே முல்கி போலீசாரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
2 பேர் கைது
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மட்கா சூதாட்டத்தில் ஈடுபட்ட மோகன் பூஜாரி, ஆனந்த் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1,365 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 2 பேர் மீதும் முல்கி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு அடுத்தப்படியாக மூடபித்ரியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.
இந்த புகாரின் பேரில் மூடபித்ரி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு எந்த மதுபானமும் சிக்கவில்லை. இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவரின் நடவடிக்கையை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதேபோல பனம்பூர் பகுதியில் மதுபான விடுதிகளில் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்தனர். பின்னர் இந்த மதுபான விடுதி நிர்வாகிகளை அழைத்து போலீசார், வரும் நாட்களில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல பல புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் கூறியதாவது:-
செல்போன் மூலம் பொதுமக்களின் புகார்களை கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். மக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.