5, 8-ம் வகுப்புகளுக்கு பொத்தேர்வு கட்டாயம்; மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கருத்து
கர்நாடகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.;
பெங்களூரு:
கர்நாடகத்தை பொறுத்தவரை எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் இந்த கல்வி ஆண்டு முதலே தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நடப்பு ஆண்டிலேயே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதாக மாநில அரசின் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த பொதுத்தேர்வு வருகிற 27-ந் தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஒரு நீதிபதி அமர்வு, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில அரசு ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீது விசாரணை தொடங்கி நடைபெற்றது.
அப்போது மாநில அரசு தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வழக்கு கடந்த 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஐகோர்ட்டில் இந்த வழக்கு 15-ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 10, 12-ம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத்தேர்வுக்கு முன்னதாக இந்த பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மீதான பயம் போகும் என்றும், இது திறனை சோதிக்கும் தேர்வே தவிர, யாரையும் தோல்வி அடைய அனுமதிக்கும் திட்டம் இல்லை என்றும் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கர்நாடகத்தில் திட்டமிட்டபடி 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அதே நேரத்தில் இந்த தேர்வில் எந்த மாணவரையும் தோல்வி அடைய செய்யக்கூடாது என்று உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் 5, 8-ம் வகுப்புகளுக்கு வருகிற 27-ந் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.
இதற்கு சிலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு:-
பொதுத்தேர்வு தேவையற்றது
பெங்களூரு கோரமங்களாவில் வசிக்கும் புவனா கூறும் போது, "எனது மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். கொரோனா காலத்தில் எனது மகள் உள்பட பிற மாணவ, மாணவிகள் வீட்டிலேயே இருந்ததால், தற்போது சரியாக படிப்பதில்லை. 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்தால், அதற்கான டியூசன் அனுப்பி படிக்க வைப்போம். தற்போது 5, 8-ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு வைத்தால், டியூசன் அனுப்பி வைக்க வேண்டும். அதற்காக தனிக்கவனம் செலுத்த வேண்டும். பொதுத்தேர்வுக்காக நிறைய சிரமங்களை பெற்றோரும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது. பொதுத்தேர்வு பற்றி சிறு பிள்ளைகளுக்கு எந்த புரிதலும் இருக்க போவதில்லை" என்றார்.
மைசூரு என்.ஆர்.மொகல்லா ராஜேந்திர நகரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி சைத்ரா கூறுகையில், "பொதுத்தேர்வு என்றாலே எங்களுக்கு பயமாக இருக்கிறது. இருப்பினும் கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி வருகிறோம். அதிலும் தற்போது 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஐகோர்ட்டு தடை விதித்தது. தற்போது 2 நீதிபதிகள் கொண்ட ஐகோர்ட்டு, பொதுத்தேர்வு நடத்த அனுமதி வழங்கியுள்ளது. பொதுத்தேர்வுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. அதற்குள் நாங்கள் எப்படி பொதுத்தேர்வுக்கு தயாராக முடியும். எங்களுக்கு கால அவகாசம் கொடுத்து இருக்க வேண்டும். பொதுத்தேர்வை நினைத்து பார்த்தால் தற்போதே கொஞ்சம் பயமாக உள்ளது" என்றார்.
சிவமொக்கா என்.டி. சாலையில் வசித்து வரும் யோஷிதா கூறுகையில், "கர்நாடகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இவ்வாண்டு முதல் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் அனைவரும் வழக்கம்போல் தேர்வுக்கு தயாராகி வருகிறோம். ஆசிரியர்களும் எங்களுக்கு பொதுத்தேர்வை எதிர்கொள்ள நல்ல முறையில் பாடம் கற்பித்துள்ளனர். மேலும் தேர்வு எழுத பயிற்சி அளித்துள்ளனர். வருங்காலத்தில் எந்த வகுப்பில் படித்தாலும் பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெறுவோம் என்ற மனவலிமையை அரசு எங்களுக்கு இப்போதே விதைத்து வருகிறது. இந்த பொதுத்தேர்வு வரவேற்கத்தக்கது தான். பொதுத்தேர்வு நடத்தினாலும் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிப்போம். யாரையும் பெயில் ஆக்க மாட்டோம் என்று அரசு உறுதி கூறியுள்ளதாக எனது தாத்தா கூறியுள்ளார். எனவே பொதுத்தேர்வை எழுத போகும் எனக்கு எந்த அச்சமும் இல்லை. பயம் இன்றி தேர்வு எழுதுவேன்" என்றார்.
அவசியம் தான்
சிக்கமகளூரு கல்தொட்டி பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி வேலு கூறுகையில், "தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த நாங்கள் பெற்றோர் காலத்தில் இருந்து இங்கு வசித்து வருகிறோம். தமிழ் மீது அதிக பற்று கொண்டதால் எனது மகன் மனோஜ் சிக்கமகளூரு தமிழ் பள்ளியில் 6-ம் வகுப்பும், மகள் மேகனா 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ளதாக கூறியதை அடுத்து நாங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். நீங்கள் தைரியமாக சென்று எழுதி அதிக மதிப்பெண் பெற்றால் எதிர்காலத்தில் 8, எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வை தைரியமாக எழுதலாம் என எனது மகளுக்கு தைரியத்தை ஊட்டி உள்ளோம். 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது நல்லது தான். அப்போது தான் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் போது அவர்கள் அச்சமின்றி செயல்படுவார்கள். என்னை பொறுத்தவரை 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அவசியம் தான்" என்றார்.
மைசூரு தெற்கு பிளாக் கல்வி அதிகாரி எஸ்.சித்தராஜு கூறுகையில், "நாங்கள் படித்துக் கொண்டிருந்த காலத்தில் 7-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருந்தது. அதற்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. நாங்கள் அந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று இன்று இந்த அளவுக்கு உயர்ந்துள்ளோம். கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமாக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதால் மாணவர்களின் கல்வி திறன் அதிகரிக்கும். எனவே பொதுத்தேர்வு எழுத போவதை நினைத்து மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் ஏற்கனவே 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கல்வியும், பயிற்சியும் அளித்து வருகிறோம்" என்றார்.
தயார் நிலையில் உள்ளோம்
சிக்கமகளூரு தமிழ் பள்ளி அறிவியல் ஆசிரியர் சரவணகுமார் கூறுகையில், "தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த கல்வி ஆண்டிலேயே 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பொதுத்தேர்வு நடத்த முதலில் தடை விதித்தது. இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் அதே ஐகோர்ட்டு பொதுத்தேர்வு நடத்தலாம் என அறிவித்துள்ளது. நாங்கள் மாணவ-மாணவிகளை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தி வந்துள்ளோம். மேலும் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். 5-ம் வகுப்பிலேயே பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வை பார்த்து பயப்பட வேண்டாம் என அறிவுரை வழங்கி வருகிறோம். மேலும் அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், பயிற்சியும் கொடுத்து பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறோம். எங்கள் பள்ளியில் 5-ம் மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துள்ேளாம்" என்றார்.
பயம் இல்லாமல் போய் விடும்
பெங்களூருவில் உள்ள எஸ்.வி.சி.கே. பள்ளியின் தலைவர் லட்சுமிபதி கூறுகையில், "மாநிலத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அரசு அறிவித்துள்ளது. அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டியது அவசியம். இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவும் குழப்பத்தை கொடுக்கிறது. அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கலிகே சேத்தரிகா (கற்றல் முறை) என்ற புத்தகம் வழங்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அந்த புத்தகத்தை வழங்கவில்லை. இது ஒரு பெரிய குறையாகும். கொரோனாவுக்கு பின்பு குழந்தைகளுக்கு போதிக்கும் மற்றும் கற்றுக் கொடுப்பதில் மாற்றம் செய்து, தேர்வு முறைக்கு தற்போது ஆயத்தப்படுத்தி உள்ளோம்.
இந்த சந்தர்ப்பத்தில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தேவையில்லை. இந்த பொதுத்தேர்வால் மாணவர்களின் குணத்தையோ, தகுதியையோ தீர்மானிக்க முடியாது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கும் உதவியாக இருக்காது. ஏனெனில் 5,8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தினாலும், மாணவர்களை தோல்வி அடைய செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் தேர்வு பற்றி மாணவர்களுக்கு பயம் இல்லாமல் போய் விடும். மாணவர்களை தோல்வி அடைய செய்யாமல், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவதால், எந்த பயனும் இல்லை" என்றார்.